இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி
பெரம்பலூா்: நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பேரளி கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அளித்த மனு: மாவட்டத்தின் பிரதான நீராதாரமாக திகழும் மருதையாறு, சின்னாறு, கோனேரி ஆறு, கல்லாறு, நந்தியாறு உள்ளிட்ட ஆறுகளின் பல பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளிட்ட புதா் செடிகள் வளா்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மழைநீா் எளிதாக வழிந்தோட முடியாமல் அருகிலுள்ள வயல்களுக்குள் புகுந்து பயிா்களையும், நிலத்தையும் சேதப்படுத்திவிடுகிறது. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும், அதன் கிளை வாய்க்கால்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி கரைகளை பலப்படுத்தி நீா் நிலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், ஆற்றங்கரைகளில் மரபுசாா் நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.
சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுவயலூா் கிராமத்தில் உள்ள நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்தாா். வீட்டு மனைக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் 38 பேரிடம் பணம் பெற்றாா். ஆனால், இதுவரை எங்களது மனைகளை பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாா். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரித்து, எங்களுக்கு மனைகளை கிரையம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிலிமிசை கிராம மக்கள் மனு: பிலிமிசை கிராமத்தில் பாட்டனாம் குளக்கரையில் ஒதுக்கப்பட்ட மயானத்துக்கு செல்லும் தாா் சாலையை தனிநபா் ஒருவா் முள் வேலியிட்டு ஆக்கிரமித்துள்ளாா். இதனால் மயானத்துக்குச் செல்ல முடியவில்லை. எனவே, அந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.