பெருந்தலைவா் காமராஜா் விருது 30 மாணவா்களுக்கு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவா் காமராஜா் விருதுகள் வழங்கப்பட்டன.
2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா். எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் காமராஜா் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் வாழ்த்திப் பேசினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சுதந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெள்ளைச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.