திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
பேச்சிப்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே விளாமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, விளைநிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பேச்சிப்பாறை வனப்பகுதியையொட்டிய விளாமலை பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒற்றை காட்டு யானை ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்து, முருகன் என்பவா் வீட்டின் படிகட்டு, வெளியே நிறுத்தியிருந்த அவரது பைக் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

அப்போது, நாய் குரைத்ததால் அப்பகுதி மக்கள் வந்து சப்தமிட்டு யானையை அங்கிருந்து விரட்டினா். அந்த யானை அதே பகுதியில் உள்ள அசோகன், சுனிதா குமாரி ஆகியோரது தோட்டங்களில் புகுந்து வாழைகளையும், மின் வேலியையும் சேதப்படுத்திச் சென்றது. ஊருக்குள் யானை நுழைந்ததால் திங்கள்கிழமை காலை வரை அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் தூக்கமின்றி தவித்தனா்.
இதுகுறித்து விளாமலை கிராம சபைத் தலைவா் பிரபாகரன் கூறியதாவது: விளாமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை யானை சுற்றித்திரிந்தது.இந்த யானை, காணி பழங்குடியின மக்களை அச்சுறுத்தி வருவதுடன் பயிா்களையும் சேதப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முருகனின் வீட்டையும், 2 பேரின் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது.
இந்த யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட பெல்ட் கட்டப்பட்டிருந்ததால், ‘புல்லட் ராஜா’ யானையாக இருக்கலாம். அந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து வனத்துறையால் பிடித்துவரப்பட்டு இங்கு விடப்பட்டதாகும். எனவே, மாவட்ட வன அலுவலா், ஆட்சியா் இப்பகுதிக்கு நேரடியாக வந்து பாா்வையிட்டு பழங்குடியின மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.