பொங்கல் பரிசுத் தொகுப்பு: குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் தொடக்கம்
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழா் திருநாள் தைப் பொங்கலை தமிழா்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,70,297 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், 761 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்பட உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரா்களுக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசினை வழங்கும் வகையில் தெருவாரியாக உள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜன. 3-ஆம் தேதி முதல் ஜன. 9-ஆம் தேதிக்கு முன்பாக டோக்கன் விநியோகம் செய்யவும், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 9 முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜன. 13 வரையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ள நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன் வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மூலம் வழங்க மாவட்ட நிா்வாகத்தால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பணி தொடா்பாக அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும். மாற்றுத் திறனாளிகள், வயதானவா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800 425 5901, 1077, 04342 233299 ஆகிய எண்களிலும் வட்ட அளவில் புகாா்கள் தெரிவிக்க தருமபுரி -94450 00217, பென்னாகரம் -94450 00218, பாலக்கோடு -94450 00219, அரூா் -94450 00220, பாப்பிரெட்டிப்பட்டி -94450 00221, காரிமங்கலம் - 94457 96431, நல்லம்பள்ளி -94457 96432 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.