பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ஆர்.பி.உதயகுமார்
"வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை 2025 ஆம் ஆண்டில் கொண்டாட மக்கள் காத்திருக்கும் வேளையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதாகத் தமிழக அரசுக்கு அறிவித்திருக்கிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பை முதன் முதலாக 100 ரூபாயுடன் ஜெயலலிதா வழங்கியபோது மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அரிசி, சர்க்கரை, கரும்பு, கிஸ்மஸ், முந்திரி, ஏலக்காய், வேட்டி, சேலை எனப் பொங்கல் பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கினார். கொரோனா காலத்தில் 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கி ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு திட்டத்திலும் புரட்சி செய்தார், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவித இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டம், 2000 அம்மா மினி கிளினிக்குகள், சாலை மேம்பாடு, 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியது என வரலாற்றுப் புரட்சிகளைச் செய்தார்.
2,500 ரூபாயை எடப்பாடி பழனிசாமி கொடுத்தபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினார். இன்று மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்க மனமில்லை. பொங்கல் பரிசுப்பணம் வழங்க அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா? பொங்கல் தொகுப்பு அறிவிப்பால் மக்களிடத்தில் மகிழ்ச்சியும் இல்லை, வரவேற்பும் இல்லை. வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுத்தாலும் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
பருவமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பொங்கல் பரிசை நீங்கள் வழங்காததுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
தேர்தலின்போது பொதுவிநியோக திட்டம் சம்பந்தமாகப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள், குடும்ப அட்டை இல்லாத தகுதியானவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய அட்டைகள் வழங்கப்படும், மாதம்தோறும் 20 கிலோ அரிசி தரமாக வழங்கப்படும் என்று சொன்னீர்கள், ஆனால் இப்போது தரமில்லாத அரிசியால் மக்கள் வேதனைப்படுகிறார்கள். பல துறைகளின் கீழ் உள்ள நியாயவிலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும், மாதம் ஒரு கிலோ கூடுதலாகச் சக்கரை வழங்கப்படும் என்று சொன்னீர்கள், எதுவும் நடக்கவில்லை. பொங்கலுக்கு வழங்கப்படும் வேஷ்டி சேலை கூட தாமதமாக வழங்கப்படுகிறது. கடந்தாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்த பின்புதான் கரும்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு 2,000 ரூபாய் அல்லது 5,000 ரூபாய் அல்லது 10,000 ரூபாய் அல்லது வழக்கம்போல மக்களுக்குப் பூஜ்யத்தை வழங்குவீர்களா?" என்று அறிக்கையில் கேட்டுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...