இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு
பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்; வீடியோ வெளியிட்ட மாணவிகள்; பின்னணி என்ன?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பள்ளியின் இசை ஆசிரியர் மாணவிகளுக்கு நடனம் பயிற்சி கற்றுக் கொடுக்கும்போது மாணவிகள் மீது கை வைத்து கற்றுக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதேபோல தாவரவியல் ஆசிரியரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் தங்களின் முகங்களை துணியால் மூடிக்கொண்டு வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்து கல்வித்துறை மற்றும் காவல்துறைக்குப் புகார் அனுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் பள்ளியில் இருக்கும் மாணவிகள் யாரும் பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லவில்லை. இதையடுத்து அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாய் தான் வீடியோவை வெளியிட்டார் எனத் தெரிந்தது. அவருக்கு சம்மன் அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவியின் தாய், “பள்ளியில் தொடர்ச்சியாக நிறைய தவறுகள் நடக்கின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர் வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் வீடியோ எடுத்து வெளியிட்டோம். வீடியோவில் பேசிய 3 மாணவிகளில் ஒருவர் என்னுடைய மகள்.

அந்த ஆசிரியர்கள் அரசியல் பின்புலத்தில் தப்பித்து வருகிறார்கள்” என்றார்.
இதனிடையே பள்ளி நிர்வாகத்திற்கும், அந்த மாணவியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட பிரச்னை நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.