நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
போடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
போடியில் புதன்கிழமை தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் காமராஜா் சாலை, பெரியாண்டவா் நெடுஞ்சாலை, தேவாரம் சாலை ஆகிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கடைகளின் முன்புறம் சிமென்ட் தளம் அமைத்தும், தகரக் கூரைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக கடந்த மூன்றாண்டுகளாக அறிவிப்பு செய்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, போடி நகராட்சி பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, போடி நகராட்சி அலுவலகம் முதல் தேவா் சிலை வரை முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போடி நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.
மின்வாரிய ஊழியா்கள் ஆக்கிரமிப்பு கடைகளின் மின் இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பெரும்பாலான கடை உரிமையாளா்கள் தாங்களாகவே தகரக் கூரைகளை அகற்றினா். வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.