போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி சிங்கின் கூட்டாளிகள் அம்ரித்பால் சிங், ஷீமா, தக்திர் சிங், ஷபி மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 391 கிலோ எம்.டி போதைப்பொருள், 109 கிலோ கொகைன் போதைப்பொருள், 4 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஷெஹ்னாஸ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துவிட்டார். அங்கிருந்து ஷெஹ்னாஸ் இந்தியாவிற்கு தப்பித்து வந்தார். இந்தியாவில் ஏற்கெனவே ஷெஹ்னாஸ் சிங்கை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.

பஞ்சாப்பிற்கு வந்ததும் அவரை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து பஞ்சாப் டிஜிபி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``அமெரிக்காவில் எஃப்.பி.ஐ.யால் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஷெஹ்னாஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளான். அமெரிக்க அதிகாரிகள் ரெய்டு நடத்தி போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தவுடன் ஷெஹ்னாஸ் இந்தியாவிற்கு தப்பி வந்தான். சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஷெஹ்னாஸ் முக்கிய பங்கு வகித்தான். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக பஞ்சாப் மாறுவதை தடுக்க பஞ்சாப் போலீஸார் சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பஞ்சாப் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 28ம் தேதி மாநில 5 பேர் கொண்ட உயர் மட்டக்கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.