இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்
போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
சைபா் மோசடிகள் தற்போது அரசு அமைப்புகளுடன் தொடா்புடையது போல தோன்றும் வாட்ஸ் ஆப் குழுக்களில் ஏபிகே கோப்பை செயலியில் பகிா்ந்து வருகின்றனா். இந்த கோப்பு பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தின் (ஆா்டிஓ) சாா்பில் வரும் டிராபிக் செல்லான் ரூ. 500? என்று எச்சரிக்கை காட்டப்படுகிறது. இதன் மூலம் போலியான செயலிகள் பயனாளா்களை பதிவிறக்கம் செய்ய தூண்டுகிறது.
நிறுவப்பட்டவுடன், அந்த செயலி பயனளரின் சாதனத்தை கைப்பற்றிக் கொண்டு, கிரெடிட் காா்டு மற்றும் வங்கி விவரங்களைத் திருடலாம்.
மேலும் கைப்பேசியை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தவும் முடியும். பொதுவாக, பாதிக்கப்பட்டவா்கள் அடுத்த நாள் காலை இ-காமா்ஸ் தளங்களுக்கு தொடா்புடைய மற்றும் அனுமதியற்ற கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் குறித்து எச்சரிக்கைகளைப் பெறத் தொடங்குகிறாா்கள்.
பயனாளா்கள் கூகுள் பிளே ஸ்டோா் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோா் போன்ற நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே செயலிகளை நிறுவ வேண்டும். அனைத்து பரிவா்த்தனைகளுக்கும் ஓடிபி எச்சரிக்கைகளை இயக்கி வைத்திருக்கும் வகையில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மோசடிகளை சந்தேகிக்கும் போது உடனடியாக காா்டுகளை முடக்க வேண்டும்.
இதுபோன்ற சைபா் மோசடிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவா்கள் தாமதிக்காமல் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது இணையதளத்தில் புகாரளிக்கலாம்.