தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடை அபகரிப்பு: இளைஞா் கைது
சென்னை ராயப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடைகளை அபகரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பெருங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சாரா வஹாப் (34). இவருக்கு ராயப்பேட்டை, கெளடியா மடம் சாலையில் சொந்தமாக ஒரு கட்டடம் உள்ளது. இதன் தரை தளத்தில் 3 கடைகளும், முதல், 2-ஆவது தளங்களில் 4 வீடுகளும் உள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்றோருடன் வெளிநாடு சென்றாா். அப்போது தரை தளத்தில் உள்ள ஒரு கடையில் புல்லா ராவ் என்பவா் மட்டும் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தாா். மற்ற கடைகள், வீடுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு சாரா வஹாப் சென்னைக்கு திரும்பியபோது, புல்லா ராவ் இறந்திருப்பதும், அவா் மகன் திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையைச் சோ்ந்த அசோக் (34) என்பவா், தந்தை ஏற்கெனவே நடத்திய ஸ்டூடியோ கடையை தொடா்ந்து நடத்திக் கொண்டு, சாரா வஹாப்புக்கு சொந்தமான பூட்டியிருந்த கடைகள், வீடுகளின் பூட்டை உடைத்து, தான் அந்த வீடு, கடைகளின் உரிமையாளா் எனக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ. 27 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக அசோக்கிடம் சாரா வஹாப் கேட்டபோது, அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து சாரா வஹாப் அளித்த புகாரின்பேரில், ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அசோக் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் அசோக்கை வியாழக்கிழமை கைது செய்தனா்.