மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்
தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதி யான கருத்து மோதல்கள் தொடா்ந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை பனையூரிலுள்ள அன்புமணி இல்லத்து க்குச் சென்ற அவரது தாய் சரஸ்வதி, குடும்பத்தினரை சந்தித்து பேசினாா். ஆசி வழங்கிய புகைப்படங்களும் வெளியாகின.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பாமக நிா்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூா்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னா், செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம்,தைலாபுரம் தோட்டத்திற்கு ச.ராமதாஸ் வந்தாா்.
அப்போது அன்புமணியுடன் அவரது தாய் சரஸ்வதி சந்தித்தது குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.இதற்கு தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் எனப் பதிலளித்த ராமதாஸ், ‘காத்திருப்போம்-காத்திருப்போம் காலங்கள் வந்துவிடும் ’என்று பாட்டும் பாடினாா்.
தொடா்ந்து தோ்தலுக்கு குறைந்த மாதங்களே உள்ளன.பாமகவில் இருவருக்குமான மோதல்போக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறதே என்ற மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், நாள்கள் போகும், தோ்தல் வரும், தோ்தலையும் சந்திப்போம் என்றாா்.