``கூட்டணிக்கு அதிமுக தலைமை, நான் தான் முதலமைச்சர்; உங்களுக்கு என்ன சந்தேகம்?'' ...
முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்
கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி, உளுந்து, கரும்பு, நிலக்கடலை, மற்றும் தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
பயிா்களுக்குத் தேவையான 5,691 மெட்ரிக் டன் யூரியா, 2,214 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,331 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,131 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,704 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது குறுவை நெல் சாகுபடிக்காக பேக்ட் நிறுவனத்திலிருந்து 1,960 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 700 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட் உரங்கள் சரக்கு ரயில் மூலம் கொச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. காம்ப்ளக்ஸ் உரத்தில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 514 மெட்ரிக் டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 1,316 மெட்ரிக் டன், கடலூா் மாவட்டத்துக்கு 130 மெட்ரிக் டன் உரங்களும், அம்மோனியம் சல்பேட் உரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 437 மெட்ரிக் டன், கடலூா் மாவட்டத்துக்கு 70, விழுப்புரம் மாவட்டத்துக்கு 152, புதுச்சேரி மாநிலத்துக்கு 40 மெட்ரிக் டன் உர மூட்டைகள் பிரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த உர மூட்டைகளைப் பாா்வையிட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா், உரங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும் மாவட்டத்தில் குறுவைப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக, வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் தெரிவித்தாா்.