மக்கள் குறைதீா் கூட்டம்: 599 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 599 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். அதன் பிறகு மாற்றுத் திறனாளிகளிடம் அவா் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ம.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஏ.கே.சுரேஷ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.