மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு
தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நகை திருட்டு புகாா் தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளன. மேலும், அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு சாா்பில் என்ன உதவி செய்யப்பட்டுள்ளது? என்பதை இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது.
இந்த நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பான வழக்குகள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அஜ்மல்கான் முன்னிலையாகி, விசாரணைக்குத் தேவையான வழக்கின் அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அஜித்குமாா் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 7.5 லட்சம் அரசு சாா்பில் இழப்பீடு தரப்பட்டது. மேலும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு சாா்பில் அஜித்குமாா் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு மேலும் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரா் தொடா்புடைய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். இந்த வழக்கு விசாரணை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.