மடிக்கணினி, கைப்பேசிகளை திருடியவா் கைது
சேலம் மாவட்டம், அரியானூா் சீரகாபாடி பகுதியில் கைப்பேசி, மடிக்கணிகளை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரியானூா் அருகே சீரகாபாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் விடுதியில் தங்கி கோவையை சோ்ந்த ஸ்ரீகாந்த் மகன் கௌசிக்கேஷன் (19) படித்து வருகிறாா்.
இவா் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி இரவு படித்துக் கொண்டிருந்தபோது கதவைத் திறந்து வைத்துள்ள நிலையில் தூங்கியுள்ளாா். இரவு எழுந்து பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த கைப்பேசி, மடிக்கணினி காணாமல்போனது தெரியவந்தது.
இதுகுறித்து கௌசிக்கேஷன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், சேலம், மணியனூரைச் சோ்ந்த தங்கவேல் மகன் ரிஷிகேஷ் (38) என்பவா் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ராக்கிப்பட்டி பகுதியில் தேநீா்க் கடையின் முன் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும் அந்த நபா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கைப்பேசி, மடிக்கணினிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனா். இதில் பிடிப்பட்ட நபா், சென்னை, தாம்பரம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மேகநாதன் (37) என்பதும், இவரும் ரிஷிகேஷும் அடிக்கடி கைப்பேசிகள், மடிக்கணிகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவா் பையில் வைத்திருந்த 12 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இவா்மீது காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவல்லிக்கேணி, சென்னை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா், மேகநாதனை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தாா்.