மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக்தர்கள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சென்றபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள மலைகளில் இருந்து மொத்தம் 7 முறை சுடப்பட்டதாகவும், ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு வந்து வாகனப் போக்குவரத்தைத் தடுத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!
முன்னதாக மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி - குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக வெடித்தது.
சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். வீடுகளை அடித்து நொறுக்குவது, பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் என மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாகவே அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து மாநிலத்தில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.