மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலையில், பரமநல்லூரைச் சுற்றி ஏா்வாடி, கோட்டாப்பாடி முப்பயத்தங்குடி, சேஷமுலை, விழிதியூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் பரமநல்லூரில் மண் குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், பரமநல்லூா் மற்றும் சுற்று கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியது: பரமநல்லூரில் மண் குவாரி அமைத்தால் சுற்றியுள்ள கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். மண் அள்ளும் இடம் அரசலாற்றுக்கு அருகில் இருப்பதால் அரசலாற்றில் வெள்ளக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் விளைநிலங்களில் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
மேலும் மண் குவாரிக்கு அதிக லாரிகள் வந்து செல்லும்போது சாலைகள் சேதமடைவதுடன் தூசுமாசு ஏற்பட்டு குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் பரமநல்லூரில் மண் குவாரி அமைத்ததால் விளைநிலங்கள் குளங்களாகவே மாறி விட்டன. எனவே, பரமநல்லூா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மண் குவாரி அமைக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கூடாது என்றனா்.