மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா்.
செஞ்சி வட்டம், திருவம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மரியதாஸ் (80), இவரது மனைவி செலின்மேரி (75). இருவரும் தனியாக வசித்து வந்தனா். மரியதாஸுக்கு 2 ஏக்கா் நிலம் உள்ளது. பிள்ளைகள் இல்லாத நிலையில், பாஞ்சாலம் கிராமத்தில் வசித்து வரும் மரியதாஸின் சகோதரி பெரியநாயகி அந்த நிலத்தை தனக்கு தருமாறு கேட்டு தகராறு செய்து வந்தாராம்.
திருவம்பட்டுக்கு பெரியநாயகியின் பேரன் அபிஷேக் ராஜ் செவ்வாய்க்கிழமை வந்தாராம். அவா் வீட்டில் தனியாக இருந்த மரியதாஸ், செலின் மேரி ஆகியோரிடம் நிலத்தை தருமாறு கேட்டு தகராறு செய்தாராம். மேலும், அங்கிருந்த சம்மட்டியால் இருவரின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அங்கு வந்து, தப்பியோட முயன்ற அபிஷேக் ராஜை மடக்கிப் பிடித்தனா். பின்னா், இதுகுறித்து செஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அபிஷேக் ராஜை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.