மயானத்துக்கு சாலை அமைத்துத் தரக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
அம்மைய நாயக்கனூா் பேரூராட்சிக்கு உள்பட இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பல்வேறு சமூகத்தினா் வசித்து வரும் இந்தக் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பொதுவான மயானம் உள்ளது. ஆனால், இந்த மயானத்துக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், இந்தக் கிராம மக்கள் அவதிப்படுநகின்றனா்.
இதுகுறித்து, இந்தக் கிராமத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால், முள்புதா் சூழ்ந்த ஓடை, தனியாா் பட்டா நிலம் வழியாக சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது. மழைக் காலங்களில் ஓடைத் தண்ணீா் செல்லும்போது, தனியாா் விளைநிலங்களுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கிராமத்தில் மயானத்துக்கு செல்வதற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு கூறுகையில், ஒருத்தட்டு கிராமத்தில் மயானத்துக்கு விரைவில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றாா் அவா்.