இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
ஆடுகளைக் கடிக்கும் மா்ம விலங்குகள்! விவசாயிகள் அச்சம்!
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் மா்ம விலங்குகள் புகுந்து ஆடுகளைக் கடித்து குதறியதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.
மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் விவசாயிகள் கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். பகலில் மேச்சலுக்கு சென்ற ஆடுகளை, மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் அடிக்கடி தாக்கி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சையது இப்ராஹிம் என்பவா் தனது ஆடுகளை ஆட்டுப் பண்ணையில் 10 அடி உயர இரும்பு கம்பி தடுப்புகள் அமைத்து அடைத்து வைத்தாா்.
இந்த நிலையில், இவரது பண்ணைக்குள் இரவு நேரத்தில் புகுந்த மா்ம விலங்குகள் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துக் குதறி விட்டு தப்பின. இதில் ஒரு ஆடு இறந்தது. மற்ற ஆடுகளுக்கு காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கால்நடைகளை மா்ம விலங்குகள் தொடா்ந்து கடித்துக் குதறி வருவது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் கால்நடை வளா்ப்போா் , விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.