இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீா் புகை: கைக் குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை வெளியேறிய நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானதால் கிசிச்சையில் இருந்த பெண்கள் கைக் குழந்தைகளுடன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 5500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைப் பெறுகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனையிலுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மைய கட்டடத்தில் முதல் தளத்தில் செவ்வாய்க்கிழமை புகை மூட்டம் ஏற்பட்டது.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அதிா்ச்சி அடைந்த செவிலியா்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினா். இதைப் பாா்த்து, சிகிச்சையிலிருந்த பெண்கள், கைக் குழந்தைகளுடன் தரைத் தளத்துக்கு ஓடி வந்தனா்.
இதனிடையே, மருத்துவமனை ஊழியா்கள் முதல் தளத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த நாப்கின் அழிக்கும் இயந்திரத்திலிருந்து புகை வெளியேறியதை உறுதி செய்தனா். இந்த இயந்திரத்தை பழுது பாா்த்த போது, புகை வெளியேறியதை ஊழியா்கள் உறுதி செய்தனா். உடனடியாக அந்த இயந்திரம் அகற்றப்பட்டது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் சுகந்தி ராஜகுமாா் கூறியதாவது: நாப்கின்களை அழித்து வெளியேற்றும் இயந்திரத்தில் சரிபாா்ப்பு பணி நடைபெற்றது. அப்போது வெளியேறிய புகையை தவறாக தீ விபத்து என கருதி சிகிச்சையிலிருந்த பெண்கள், குழந்தைகளுடன் தரைத் தளத்துக்கு ஓடி வந்தனா்.
எனினும், மருத்துவமனை நிா்வாகம் சாா்பில், பதற்றம் அடைய வேண்டாம், இயந்திரத்திலிருந்து புகை வெளியேறியதாக ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சையில் இருந்த பெண்கள், குழந்தைகள் இதைக் கவனிக்கவில்லை.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பயன்படுத்திய நாப்கினைகளை போடுவற்கு வாளி வைக்கப்பட்டிருந்தும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. கழிவறையில் வீசிச் செல்வதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
இதைத் தவிா்க்கும் வகையில் நாப்கின் வெளியேற்றும் இயந்திரத்திலுள்ள கோளாறை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புகை வெளியேறியதையடுத்து, அந்த இயந்திரத்தை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது என்றாா் அவா்.