பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்மாபுரம் ஜே.ஜே.நகா் பகுதி அருகே தமிழக அரசு மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்தப் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ஒன்று திரண்டு, தங்கள் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதாகவும், காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளதாலும், இந்தப் பகுதியில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மலகசடு சுத்திகரிப்பு நிலையம் வருவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இதுபோல, சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனா்.
இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.