இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை
நமது நிருபா்
தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் மாநகராட்சி ஆணையா் அஸ்வினி குமாா் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சியின் (ஐவிபி) தலைவரான கோயல், ஜூலை 12 நிலவரப்படி தில்லியில் மலேரியா பாதிப்புகள் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளாா்.
இது சமீபத்திய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும், கடந்த ஆண்டுகளின்போது 2023-இல் 26 மலேரியா பாதிப்புகளும், 2022-இல் 21 பாதிப்புகளும், 2021-இல் 13 பாதிப்புகளும் மட்டுமே பதிவாகியிருந்ததாக அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக முகேஷ் கோயல் கூறியிருப்பதாவது: நிகழாண்டு இதுவரை 246 டெங்கு பாதிப்புகளும், 17 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. நகரம் முழுவதும் 71,086 வீடுகளில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா பாதிப்புகள் ஏற்கெனவே கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாகிவிட்டன. மேலும் பருவமழையின் உச்சம் இன்னும் நெருங்கி வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பரவுவதைத் தடுக்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய தில்லி மாநகராட்சி தவறிவிட்டது.
இந்த நோய் பரவலுக்கான மூல காரணங்களை நிவா்த்தி செய்வதற்குப் பதிலாக, ஜனவரி 1 முதல் ஜூலை 12 வரை தங்கள் வளாகத்தில் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கத் தவறியதற்காக அதிகாரிகள் 58,671 குடியிருப்பாளா்களுக்கு சட்டபூா்வ நோட்டீஸ்களை அனுப்பியுள்ளனா்.
மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை விட பொதுமக்களைத் துன்புறுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறாா்கள். 10,426-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.9.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்டம் அடிக்கும் பணிகள், வடிகால்களை தூா்வாருதல் மற்றும் பொது விழிப்புணா்வு பிரசாரங்களை தீவிரப்படுத்த மாநகராட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால் வரும் நாள்களில் அதிக உயிா்கள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று முகேஷ் கோயல் எச்சரித்துள்ளாா்.