மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு'ன்னார் தலைவர் - `திக் திக்' சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா
``ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவை என்னால் மறக்கவே முடியவில்லை'' என்கிறார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா. 'ஏன், அப்போது, என்ன நடந்தது' அவரிடமே பேசினோம்.
''1999ம் வருஷம். இதே மார்ச் மாத பௌர்ணமிக்கு முந்தைய நாள். தலைவர் வைகோ, அவருடைய மூத்த மருமகன் ராஜசேகர், தலைவருடைய அண்ணன் மகன் ராஜேஷ்னு நாங்க நாலு பேருமா பாய்மரப் படகை எடுத்துக்கிட்டு மாமல்லபுரக் கடலுக்குள் போனோம். நாங்க கடற்கரையில் கால் வைத்தப்போ காத்தும், கடலும் சாதாரணமானதாகத்தான் இருந்தது. அதனால் இறங்கியாச்சு. உள்ளே போகப்போக தலைவருக்குமே ஆர்வம் அதிகமாக கொஞ்சம் தள்ளியே கடலுக்குள் போயாச்சு.

சரி, திரும்பலாம்னு நாங்க நினைச்ச அந்த நிமிஷம்தான் நாங்க எதிர்பாராத நொடியில அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எங்கிருந்து வந்ததுனு தெரியறதுக்குள்ள திடீரென வந்த அந்த அலை மோதின வேகத்தில் படகு தலைகீழா கவிழ்ந்திடுச்சு.
ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னு தெரியறதுக்குள்ள நாங்க ஆளுக்கொரு திசையில் கிடக்கோம். கடல் நீச்சல் எனக்கு நல்ல பரிச்சயம்கிறதால நான் உடனே சுதாரிச்சு தண்ணீருக்கு அடியில இருந்து மேல வந்துட்டேன்.
பதறிப் போய் மத்தவங்களைத் தேடினா, ராஜேஷும் தலைவர் மருமகனும் மட்டும் படகின் ஒரு ஓரத்தை விடாம பிடிச்சபடி தத்தளிச்சிட்டிருக்காங்க. ஆனா தலைவரைக் காணல. அவர் படகுக்குக் கீழே மாட்டிகிட்டார்.
அந்த இடம் மட்டும் ஆழ்கடலா இல்லாம கரையா இருந்தா பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துடும். ஏன்னா படகு மூழ்கிட்டா ரொம்ப கணத்துப் போயிடும். பத்து பேருக்கு மேல் சேர்ந்தா மட்டுமே அதைப் புரட்ட முடியும். ஆழ்கடல்னா நீரில் உள்நோக்கி நீந்தி வெளியில் வந்துடலாம்.
தலைவர் வைகோ அப்படித்தான் நீந்த முயற்சி செஞ்சிட்டிருக்கார். ஆனா, நீரோட்டம் காரணமா எங்களுக்கும் அவருக்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. கடலின் சுழற்சியில் எதிர்த்து நீச்சல் போட்டா சக்தி விரயமாகி ஒருகட்டத்துல நம்மால் நீந்த தெம்பு இருக்காது. அலையின் போக்குல நீந்திப் போனா கொஞ்ச தூரம் போய் கரையை அடைந்துடலாம்.

கடல் பத்தித் தெரிஞ்சவங்க இதைப் புரிஞ்சுகிட்டு அந்தச் சூழலை நிதானமா கையாள்வாங்க. ஆனா மத்தவங்களைப் பொறுத்தவரை அலையின் போக்கிலே போனா இன்னும் ஆழத்துக்குள்ள போயிடுவோமோங்கிற பதட்டம்தான் அதிகரிக்கும்.
தலைவர் என்னைப் பார்த்து கையசைத்தபடியே எதிர்த்திசையில் நீந்த முயற்சி செய்றார். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. நான் அவர் இடத்துக்குப் போகத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவருக்கு சிக்கலாகலாம். அதனால ராஜேஷையும் தலைவர் மருமகனையும் அலையின் போக்கிலேயே நீந்தச் சொல்லிட்டு, அலையின் போக்குக்குக் காத்திராம 'என்ன ஆனாலும் பரவால்ல'ன்னுட்டு நான் எதிர்த்து நீச்சலடிக்கத் தொடங்கினேன், தலைவரை நோக்கி!
கொஞ்ச நேரத்துல அவர்கிட்ட போய் அவர் கையையும் பிடிச்சபடி ரெண்டு பேரும் நீந்தறோம்.
கொஞ்ச தூரத்துல ஒரு மணல் மேட்டுப் பகுதி. ஆனா அதுல காலை வச்சு நிக்க முடியாது. நின்னா உள்ளுக்குள் இழுக்கும். தலைவர்கிட்ட அதைச் சொல்லி திரும்பவும் நீந்தறோம்.
எதிர்பாராத இந்தச் சூழலால் ரொம்பவே சோர்ந்து போயிட்ட தலைவரால் தொடர்ந்து நீந்த முடியல. 'இல்ல, முடியாது, போச்சு' எனச் சொல்லத் தொடங்கிவிட்டார். 'இல்ல அண்ணா, போயிடலாம், கரை வந்திடுச்சு'ன்னு சொல்லியபடியே அவருடைய பணியனைக் கெட்டியாப் பிடிச்சபடி ரெண்டு பேருமா நீந்தி ஒருவழியா கரைக்கு வந்தோம்.
இன்னொரு பக்கம் ராஜேஷும், தலைவர் மருமகனுமே வந்து சேர்ந்துட்டாங்க.
கடல் நீரை ரொம்பவே குடிச்சிருந்தார் தலைவர். கண் காது மூக்குல எல்லாம் மண் போயிடுச்சு. எல்லாருமே ரூமுக்கு வந்ததும் முக்கால் மணி நேரம் வெண்ணீர்ல குளிச்சார் தலைவர். குளிச்சுட்டு பட்டு வேஷ்டி சட்டையில வழக்கமான அதே புன்னகையில் அவர் வெளியில் வந்த அந்த நொடி, நான் தேம்பித் தேம்பி அழுதுட்டேன். தலைவர் என்னைத் தேற்றினார். படகு கவிழ்ந்தப்ப என்னுடைய கனுக்கால்ல பட்ட அடியின் பாதிப்பு இப்ப வரை தொடருது. உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நேரம் இன்னும் வலிக்குது'' என்றார் சத்யா.