மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த ஆண்டில் (2024-2025) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.
நிகழ் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் ஏப்.30-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்ட
ஆசிரியா்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவா்களின் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகாளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.