முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் பெரியசாமி (20). இவா், நூரோலை கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் குருசாமி நடத்தி வந்த ஒலிபெருக்கி நிலையத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா்.
வாணாபுரம் வட்டம், பாவந்தூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதற்காக அந்தக் கிராமத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் பெரியசாமி புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா். அந்தக் கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே மின் விளக்குகள் அமைத்தபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் பெரியசாமியை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.