மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி
சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது.
சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நாகை வடக்கு வீதியில் இயங்கிவருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன், கோழி, ஆடு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மீன் மாா்கெட் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக தற்காலிகமாக அப்பகுதியில் கொட்டகை அமைத்து மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு வெளியேற்றப்படும் மீன், இறைச்சி கழிவுகள் பின்புறம் கொட்டிவைக்கப்பட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறு அள்ளி அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில தினங்களாக இறைச்சி கழிவுகள் முறையாக அள்ளப்படாததால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது.
இதனால் மீன் விற்பனையாளா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அருகில் குடியிருப்பவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.