மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன்னாட்டு விமான நிலையத்துக்கும், மும்பையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்துக்கும், இன்று (ஜூலை 17) மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரையில் செல்போன் அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரிகளுக்கு வந்த செல்போன் அழைப்புகள் மூலம் பேசிய மர்ம நபர்கள், மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான விமானத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதேபோன்ற, மற்றொரு அழைப்பில், மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் மீது மாலை 6.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர் ஒருவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நவி மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்களைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை, யாரும் கைது செய்யப்படாத நிலையில், மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கும் நோக்கில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்