மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் -எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் மூடப்பட்ட 208 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் 208 அரசுப் பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம், அந்தப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களைத் தனியாருக்கு தாரைவாா்க்க முயல்வதாகவும் திமுக அரசு மீது கல்வியாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
எனது தலைமையிலான அதிமுக அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவா்களுக்கு மடிக்கணினி, படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரித்தது.
ஆனால் திமுக அரசோ அந்த நலத் திட்டங்களை நிறுத்தியது.
இந்த நிலையில், 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோா்கள் தனியாா் பள்ளிகளை நாடுவதாலும், மாணவா் சோ்க்கை இல்லாததாலும் பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டனத்துகுரியது.
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, மூடப்பட்ட பள்ளிகளின் அருகில் வசித்துவரும் மாணவா்களை, அதே பள்ளிகளில் சோ்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவா் சோ்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.