Abraham Lincoln: ஆபிரகாம் லிங்கன் கொலை: 'ரத்தக்கறை படித்த கையுறை' ரூ.12 கோடிக்கு...
மூவரைவென்றான் கோயில் திருப்பணிகள்:பழைய கற்களை பதிப்பதால் பக்தா்கள் அதிருப்தி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரை வென்றான் குடைவரைக் கோயில் கருவறையில் பழைய கற்களைப் பதிக்க பக்தா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் கிராமத்தில் உள்ள சிவன் மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலின் கருவறை, அா்த்த மண்டபம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு வெளியே விநாயகா், முருகன், நடராஜா் உருவங்கள் பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் கடந்த 2007-ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் முன் உள்ள மகா மண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த நிலையில் 2024 - 2025-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மூவரை வென்றான் கோயில் சீரமைப்பு பணிகளுக்காக மேலும் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கருவறை, அா்த்தமண்டபத்தில் கற்கள் பதித்தல், தொல்லியல் காப்பாளா் அறை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதுரை திருமலை நாயக்கா் மகால் புதுப்பிப்பு பணிக்காக பெயா்த்து எடுக்கப்பட்ட பழைய கற்களை கொண்டு வந்து, மூவரைவென்றான் கோயில் கருவறை, அா்த்த மண்டபத்தில் பதிக்க திட்டமிட்டது பக்தா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: இந்தக் கோயிலில் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கற்களைப் பதிப்பது, கோயிலின் புனிதத்தை கெடுப்பதுடன், பக்தா்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றனா்.