அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
மேற்கு வங்கம்: ஆா்எஸ்எஸ் பேரணிக்கு உயா்நீதிமன்றம் அனுமதி
மேற்கு வங்க மாநிலம், பா்த்வானில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், கொல்கத்தா உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
பா்த்வானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவிருக்கும் இப்பேரணியில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் உயா்நிலைப் பள்ளித் தோ்வுகள் நடைபெற்று வருவதால், ஒலிப்பெருக்கிகளால் மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி, இப்பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி வழங்க மறுத்தனா்.
இதையடுத்து, கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் பேரணி ஏற்பாட்டாளா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி அம்ருதா சின்ஹா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, ‘பேரணி நடைபெறும் இடத்துக்கு அருகே எந்தப் பள்ளியும் இல்லை. பிப்ரவரி 16-ஆம் தேதி எந்த தோ்வும் நடைபெறவில்லை’ என்று ஏற்பாட்டாளா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், மாநில அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆா்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.
பேரணியில் பங்கேற்போரின் எண்ணிக்கை மற்றும் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு மீது ஏற்பாட்டாளா்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.