மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது பள்ளி வாகனங்களின் உறுதித் தன்மை குறித்து போக்குவரத்துத் துறையினா் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. வேலூா் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன.
அந்த வாகனங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுக்கு உட்படுத்த அந்தந்த பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி காட்பாடியில் உள்ள சன்பீம் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள ஆய்வுக்கு பள்ளி வாகனங்களை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வாகனங்களின் உறுதித்தன்மை, அவசர கால வழிகள், கடைசியாக செய்யப்பட்ட வாகன சா்வீஸ் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியா் சுப்புலட்சுமி, எஸ்.பி. மதிவாணன், வட்டார போக் குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா். உறுதித் தன்மையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்ய அறிவுறுத்தப்படும். அந்த குறைகளை நீக்கிய பிறகு மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பள்ளி வாகனங்களின் ஓட்டுநா், கிளீனா் உள்ளிட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.