கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
மே 20-இல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் பிரசாரம்
வரும் 20-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த விளக்க பிரசாரம் தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் மத்திய தொழிற்சங்கங்களின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்த விளக்கப் பிரசாரம் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொமுச விழுப்புரம் மண்டல பொதுச் செயலா் சேகா் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் மூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.சௌரிராஜன் ஆகியோா் பங்கேற்று போராட்டம் குறித்து விளக்கவுரையாற்றினா்.
தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அரசு பொது நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்குவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
பிரசாரக் கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, திண்டிவனம் மேம்பாலம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலம் எதிரே தொழிற்சங்க கூட்டமைப்பினா் பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த பிரசாரத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.