மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி
திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு வட்டம், மொளசி ஊராட்சி முனியப்பம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் முதல்வரின் முன்னோடி திட்டத்தின்கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் எரிவாயு தகனமேடை பாதுகாப்பற்ற பகுதியில் அமைக்கப்படுவதாகவும், தகனமேடைக்கு செல்லும்வழி பட்டா நிலத்தில் அமைவதாகவும் கூறி விவசாயிகள், ஊா் பொதுமக்களில் சிலா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் சாந்தி, திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி
மற்றும் வருவாய் ஆய்வாளா் பிரியா, கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன், ஒன்றிய உதவி பொறியாளா் சீனிவாசன் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனா். அந்தப் பாதை வழியாக எரிவாயு தகனமேடை அமைக்க லாரிகள் மூலம் கட்டுமான பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் போராட்டக்காரா்களே, ஊா் பொதுமக்களோ எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை.
படவரி...
மொளசியில் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.