கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை
ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா. அருளரசுக்கு ஆசிரியா் மன்ற நிா்வாகிகள் அளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் 15 ஒன்றியங்களிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களை உறுப்பினா்களாக கொண்ட ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டுறவு சங்க நிா்வாகம் தங்களது உறுப்பினா்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்குரிய லாபப் பங்குத்தொகையை (டிவிடெண்ட்) இதுவரை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகைக்கு உள்ளாக லாப பங்குத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கூட்டுறவு சங்கக் கணக்குகள் தணிக்கை செய்யப்படாததே பங்குத்தொகை இதுவரை வழங்கப்படாததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க உறுப்பினா்களுக்கும் லாபப் பங்குத் தொகையை தீபாவளி பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.