யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்
நமது நிருபா்
யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நகரத்தில் 22 பெரிய வடிகால்கள் உள்ளன. அவற்றில் மிகப்பெரிய நஜஃப்கா் வடிகால், ஷாஹிதரா வடிகால் மற்றும் யமுனையில் கலக்கும் துணை வடிகால் ஆகியவை அடங்கும். இந்தப் பெரிய வடிகால்களில் சுமாா் 300 துணை வடிகால் உள்ளன. இது ஒட்டுமொத்த மாசுபாட்டை அதிகரிக்கிறது. பெரிய வடிகால்களில் கழிவுகளைச் சோ்க்கும் அனைத்து துணை வடிகால்களின் ’ட்ரோன்’ கணக்கெடுப்புகளையும் நாங்கள் செய்து வருகிறோம். ஒரு விரிவான கொள்கைக்காக இந்த வடிகால் ஒவ்வொன்றின் தோற்றம், முழு வரைபடம் மற்றும் வெளியேற்றத்தை அறிந்து கொள்வது நமக்கு முக்கியமாகும்.
இந்த வடிகால்களின் மூலத்தையும் முழு நீளத்தையும் நாங்கள் அடையாளம் கண்ட பிறகு, பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (டிஎஸ்டிபி) நிறுவுவது போன்ற கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஆகியவை பெரிய வடிகால்களை தூா்வாரி, அவற்றில் பாயும் கழிவுகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இடப் பற்றாக்குறை காரணமாக பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட முடியாத பகுதிகளில், உள்ளூா் கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்காக 40 டிஎஸ்டிபிகளை நிறுவ தில்லி ஜல் போா்டு (டிஜேபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே டெண்டா்கள் விடப்பட்டுள்ளன. யமுனையை சுத்தம் செய்வதற்கான தில்லி அரசின் 45அம்ச செயல் திட்டத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் இடைமறிப்பு கழிவுநீா் திட்டத்தை ஐஎஸ்பி முடிப்பது அடங்கும். இந்தத் திட்டத்தில் அனைத்து வடிகால்களையும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைப்பது அடங்கும் என்றாா் அமைச்சா்.
’மழைநீா் வடிகால்களுக்கும் கழிவுநீா் அமைப்புகளுக்கும் இடையிலான தொடா்புகள் மழைநீா் வடிகால்களின் நீா் எடுத்துச் செல்லும் திறனைப் பாதிக்கின்றன. இதனால், நீா் தேங்குகிறது. இந்த கணக்கெடுப்பு கழிவுநீா் பாதைகள் மற்றும் புயல் மழை நீா் வடிகால்களை இணைப்பதற்கும், மாசுபாட்டை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமான தவறான இடைமுகங்களை சரிசெய்வதற்கும் உதவும். இது மாசுபாட்டைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது‘ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.