மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
ரஜினிகாந்த்: 'மராட்டிய பூர்வீகம்' முதல் 'சமூக அக்கறை' வரை - CPI தலைவர் முத்தரசன் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அவரது திரை வாழ்க்கையின் 50 ஆண்டுகள் நிறைவையும் ஒன்றாக கொண்டாடுவதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலளர் இரா.முத்தரசன், CPI மாநில செயற்குழு சார்பாக ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது சமூக வலைத்தள பதிவில், "மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட காவலர் குடும்பம், தற்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சி குப்பத்தில் வாழ்ந்து வந்தபோது, அந்த குடும்பத்தின் நான்காவது குழந்தையாக 1950 டிசம்பர் 12 பிறந்த சிவாஜி ராவ் கெய்க்வாட்.
இவர் 1975 ஆம் ஆண்டில் இயக்குநர் சிகரம் திரு கே.பாலச்சந்தரால் “அபூர்வராகங்கள்” திரைப்படத்தில் “ரஜனிகாந்தாக” அறிமுகப்படுத்தப்பட்டார்.
அன்று தொடங்கிய திரையுலக வாழ்க்கை பொன்விழா காணும் இனிய தருணத்தில், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கி வருகிறார்.

காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பொதுக் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டி வந்த சமூக அக்கறை கொண்டவர்.
பொன்விழா காணும் அவரது திரையுலக வாழ்வு நூறாண்டு விழா கண்டு சிறக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது." என வாழ்த்தியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் உடன் நாகர்ஜுனா, உப்பேந்திரா, சௌபின் சாஹிர், ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என இந்தியா முழுவதுமிருந்து நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.