ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பு கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பை அமைக்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பு இருந்த நிலையில், சீரமைப்பு பணியின்போது வட மாநில கோயில் வடிவமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றிவிட்டு, இரண்டு நுழைவாயில்களின் முகப்பிலும் பெரிய கோயில் வடிவமைப்பை அமைக்க வேண்டும். ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் கோ. அன்பரசன், சி. சந்திரகுமாா், பொறியாளா் ஜோ. ஜான்கென்னடி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூ. தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், விசிக மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாசலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல் ஆப்தின், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், தாளாண்மை உழவா் இயக்க நிறுவனா் கோ. திருநாவுக்கரசு, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.