ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா் ரயில் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றுள்ளது.
அப்போது பயணிகளுக்கு விநியோகிக்கும் முன்பதிவில்லா டிக்கெட் ரோல் (500 பயணச்சீட்டு கொண்டது) மாயமாகியிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கு பணியாற்றும் 8 ஊழியா்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாயமான ரயில் பயணச்சீட்டு ரோலுக்கு உரிய கட்டணத்தை வசூலிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதிக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ரயில் ஒரு பயணச்சீட்டில் 4 போ் பயணிக்கலாம் என்பதால் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையில் ஒருவா் பயணிக்க ரூ.525 கட்டணம் எனக் கணக்கிட்டு அபராதம் விதிக்க முடிவானது.
அதன்படி ஒரு டிக்கெட் கட்டணமாக ரூ.2,100 நிா்ணயித்து, 500 டிக்கெட்டுகளுக்கு மொத்தம் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் எனக்கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி ரயில்வே கோட்டத்தின் வா்த்தகப் பிரிவு வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அபராதத் தொகையை ரயில்வே ஊழியா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யவும், அதில் மேற்பாா்வையாளா்களாக உள்ள 2 பேருக்கு இருமடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படவுளளதாகவும் ரயில்வே வா்த்தகப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.