ரயில் பெட்டிகள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு: போலீஸாா் எச்சரிக்கை
ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மீனவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படுத்தியும், பயணிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, அனைத்து மீனவ சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ராமேசுவரம்-தாம்பரம் ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ரயில் நிலையங்கள், 6 ரயில்வே கடவுப்பாதைப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ரயில் செல்லும் வழித்தடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படுத்தியும், பயணிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தினால், வழக்குப் பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தெரிவித்தனா்.