ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்தியா, பிரிட்டன் என இரண்டு குடியுரிமைகளை வைத்திருப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டில் அவரின் எம்பி பதவியைப் பறிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என்றும் கூறி கர்நாடக பாஜகவை சேர்ந்த எஸ். விக்னேஷ் சிசிர் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தார்.
முன்னதாக ராகுல் காந்திக்கு எதிராக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை குறித்து தனது கடைசி விசாரணையில் அலாகாபாத் நீதிமன்றம் அதிருப்தியைத் தெரிவித்தது. மேலும் ராகுலின் குடியுரிமை குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துத் திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் அளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்ததன் அடிப்படையில், இந்து வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு லக்னௌ அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்பிறகு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான், ராஜீவ் சிங் ஆகியோர் அடங்கிய லக்னௌ அமர்வு உத்தரவிட்டுள்ளது.