ரூ.1.85 கோடியில் வலை பழுதுபாா்க்கும் கூடம்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரியில் ரூ.1.85 கோடி மதிப்பில் 2 இடங்களில் மீனவா்களின் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்று திட்டப்பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டம் மூலம் ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட நரம்பை கிராமத்தில் ரூ.1.24 கோடி செலவில் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்கவும், ரூ.47.87 லட்சத்தில் குளிா் பதன சேமிப்புக் கிடங்கு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், பாகூா் தொகுதிக்கு உள்பட்ட மூ.புதுக்குப்பம் கிராமத்தில் ரூ.61.86 லட்சம் செலவில் வலை பழுது பாா்க்கும் கூடம் அமைக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை விழாவில்
முதல்வா் என். ரங்கசாமி கலந்து கொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.
அமைச்சா் லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமாா், மீன்வளத்துறை செயலா் மணிகண்டன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சதாசிவம், மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், மீன்வளத்துறை இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.