ரூ.2.96 கோடி ஓய்வு பணம்; மனைவியை தவிர்த்து தனியே வாழ்ந்த நபர் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
ஓய்வுக்காலத்தில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ முடிவு செய்த ஒரு ஜப்பானிய ஆணின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டெட்சு யமடா என்பவர் தனது 60 வயதில் ஓய்வு பெற்றிருக்கிறார். 2.96 கோடி ரூபாய் (50 மில்லியன் யென்) ஓய்வூதியத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்று எளிமையான வாழ்க்கை வாழ விரும்பி இருக்கிறார். ஆனால், நகர வாழ்க்கைக்கு பழகிய அவரது மனைவி கெய்கோ இந்த முடிவை ஏற்கவில்லை.
இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் டோக்கியோவில் வேலை செய்வதால் அவர்களாலும் யமடாவின் சொந்த ஊருக்கு இடம்பெயர முடியவில்லை.

இதனால் யமடாவுக்கும் கெய்கோவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. அந்த சமயத்தில் யமடாவும் கெய்கோவும் 'சோட்சுகான்' என்ற ஜப்பானிய முறையில் தனித்தனியாக வாழ முடிவு செய்தனர்.
சோட்சுகான் முறை என்பது
திருமணத்தில் இருந்தபடியே தனித்தனியாக வாழும் ஒரு முறையாகும். விவாகரத்து என்ற முறையை இது சாராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2004இல் ஒரு ஜப்பானிய பெண் எழுத்தாளரால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விவாகரத்தை விட இது எளிமையானது என நினைத்த கெய்கோ, இந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் யமடா தனது ஓய்வூதியப் பணத்தைப் பயன்படுத்தி சொந்த ஊரில் உள்ள வீட்டை புதுப்பித்து, தனியாக அங்கு வாழத் தொடங்கியிருக்கிறார். ஆண்கள் விரும்பும் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டார் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையில் யமடா சந்திக்கும் சவால்கள்
மனைவி இல்லாமல், யமடா வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் தடுமாறியிருக்கிறார். சமையல் போன்ற பணிகளைக் கூட செய்ய முடியாமல், உடனடி நூடுல்ஸ் போன்றவற்றை மட்டும் உணவாக உட்கொண்டு இருக்கிறார்.
யமடா இப்படி சிரமப்படும்போது, கெய்கோ டோக்கியோவில் தொடங்கிய கைவினைப் பட்டறை வெற்றிகரமாக இயங்குவதை யமடா சமூகவலைதளத்தில் கவனித்துள்ளார். தான் இல்லாமல் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர் தான் எடுத்த முடிவு குறித்து வருத்தப்படுவதாகவும் இது குறித்து கூறியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் டோக்கியோவுக்குத் திரும்பி குடும்பத்துடன் வாழ திட்டமிடுகிறாரா என்பது குறித்த தகவல் தெளிவாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.