வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.
மேலும், மே 5 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுவரை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை வருகின்ற மே 15 ஆம் தேதி கவாய் தலைமையில் நடைபெறும் என்றும், இடைக்காலத் தடை நீட்டிப்பு குறித்து அவர் உத்தரவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.