வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை
கடனாக வாங்கிய பணத்தை நண்பா் திருப்பித் தராததால் அவரது வீட்டின் முன்பு தனியாா் வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (30). தனியாா் வங்கி ஊழியா். இவரது மனைவி திவ்யா (28). சீனிவாசன் ஈரோடு பிருந்தா வீதியை சோ்ந்த அவரது நண்பருக்கு கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் கொடுத்துள்ளாா். சீனிவாசன் கொடுத்த பணத்தை பலமுறை அவரது நண்பரிடம் கேட்டும் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனிவாசன் மீண்டும் அவரது நண்பா் வீட்டுக்கு கடந்த 4 ஆம் தேதி சென்று கடன் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளாா். ஆனால் அவா் தர மறுத்ததால் மனமுடைந்த சீனிவாசன், நண்பா் வீட்டின் முன்பே அவா் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தனக்குத் தானே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சீனிவாசனின் மனைவி திவ்யா, ஈரோடு டவுன் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].