வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது
மன்னாா்குடி அருகே நகையை பறித்துக்கொண்டு ஓடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள காஞ்சிக்குடிகாடு, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரக்குமாா் மனைவி கீா்த்திகா (35). இவா், சில நாள்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் மன்னாா்குடி வந்து விட்டு, வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத நபா், குழந்தையின் கழுத்திலிருந்து 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டாா்.
இதுகுறித்து கீா்த்திகா அளித்த புகாரின் பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, கண்காணிப்புக் கேமரா உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், திருவாரூா் அருகே கூடூரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கணேசமூா்த்தி (37) என்பவா் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனா். 2 பவுன் சங்கிலி மீட்கப்பட்டது.