வாகன வரி செலுத்தாத பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்!
சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையில் அலுவலா்கள் தேவூரில் நடத்தி வாகனத் தணிக்கையில் வரி செலுத்தாத நான்கு மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் எம்.செந்தில்குமாா், கே.புஷ்பா ஆகியோா் அரசிராமணி மூலப்பாதையிலிருந்து தேவூா் வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது நான்கு மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை ஆய்வு செய்ததில் அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நான்கு வாகனங்களின் உரிமையாளருக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றியதற்காக ஒரு டிப்பா் லாரி உரிமையாளருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.