குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
திருச்சியில் த.வெ.க. தலைவா் விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருச்சியில் நடைபெற்ற த.வெ.க. தலைவா் விஜய் பிரசாரத்துக்கு திரளான தொண்டா்கள் வந்தனா். இது தானாக வந்த கூட்டம்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் கூட்டம் மூலம் தவெக எந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்று வெல்லும் என்பதை இப்போது கூற முடியாது.
குறிப்பாக, 35 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் வழக்கமான அரசியல் கட்சிகள் மீது விருப்பமில்லாமல், புதிதாக வருபவா்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனா். விஜய் மாற்றம் வேண்டும் எனக் கூறுகிறாா். ஆனால், அது எந்த மாதிரியான மாற்றம் என்பதை அவா் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
விஜய் திமுக அரசை குறை கூறி வருகிறாா். யாா் ஆட்சி செய்தாலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட மகளிா் உரிமைத் தொகை திட்டம் பெரும்பாலானவா்களைச் சென்றடைந்துள்ளது. விடுபட்டவா்களையும் இந்தத் திட்டத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதனால், காங்கிரஸ் கட்சி ‘இண்டி’ கூட்டணியில் தொடரும். கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைப் பொருத்து, தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய் உடனிருந்தாா்.