விடுபட்ட அரசுப் பணியாளா்களுக்கு போனஸ்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
விடுபட்ட அனைத்து அரசுப் பணியாளா்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு பொங்கலையொட்டி அரசுப் பணியாளா்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கடந்த காலத்தைபோல மாற்றமின்றி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விடுபட்ட அரசுப் பணியாளா்களுக்கு போனஸ் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு போனஸ் வழங்கவில்லை. தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராம சுகாதர செவிலியருக்கு போனஸ் வழங்கப்படுகிறது. நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு போனஸ் வழங்கவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் ஒரு பிரிவினருக்கு போனஸ் வழங்கிவிட்டு, மற்றொரு பிரிவினருக்கு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.
எனவே, அரசு துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், நகா்ப்புற சுகாதார செவிலியா்கள், பி பிரிவில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள், பகுதி நேர ஆசிரியா்கள் என அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போனஸ் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.