கூட்டப்பள்ளி ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு!
கூட்டப்பள்ளி காலனி ஏரி பகுதியில் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூட்டப்பள்ளி காலனி அமைந்துள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பெரிய பரப்பளவில் ஏரி இருந்த நிலையில், நகராட்சி குப்பைக் கிடங்காக மாறியதால் ஏரி சுருங்கி கழிவு நீா் ஓடையாக மாறிவிட்டது. மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கூட்டப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருச்செங்கோடு நகராட்சி நிா்வாகம் ரூ. 36 கோடி செலவில் கூட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து இடத்தை தோ்வு செய்தது. இதனையறிந்த கூட்டப்பள்ளி பொதுமக்கள் இப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 30-ஆம் தேதி திருச்செங்கோடு அண்ணா சிலை முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி நிா்வாகத்துக்கு மனுக்கள் அளித்தனா்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட போராட்டமாக புதன்கிழமை கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.